
ICC Test Players Rankings: ஐசிசி வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் ஹாரி புரூக் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் சோபிக்க தவறினார். அதேசமயம் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றினார். இதன் காரணமாக ஜோ ரூட் ஒரு இடம்முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், ஹாரி புரூக் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.