
இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த இங்கிலாந்து அணியானது, ஒருநாள் தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்கு இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.