T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 38 ரன்களுக்கும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைக் குவித்தது. அதன்பின் 181 ரன்கள் என இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
இதில் கேப்டன் ஜோஸ் பட்லர் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மொயீன் அலியும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Most runs as wicketkeeper in T20Is
— saurabh sharma (@cntact2saurabh) June 20, 2024
2967 - Jos Buttler (ENG)
2952 - Mohammad Rizwan (PAK)
2450 - Quinton de Kock (SA)#T20WC2024 #WIvENG
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் படல் 25 ரன்களைச் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய விக்கெட் கீப்பர் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். முன்னதாக முகமது ரிஸ்வான் 2952 ரன்களை சேர்த்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஜோஸ் பட்லர் 2967 ரன்களைச் சேர்த்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now