
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து அசத்தினார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்ததன் மூலம், இந்தியா-இங்கிலாந்து டி-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 முறை 50+ ஸ்கோரை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோஸ் பட்லரும் 5 முறை 50+ ஸ்கோரை அடித்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டிகளில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்தவர்கள்
- 5 -ஜோஸ் பட்லர்*
- 5-விராட் கோலி
- 4-ரோஹித் சர்மா
- 3 - அலெக்ஸ் ஹேல்ஸ்