
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகப்பட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களையும் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று போட்டியின்போது வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “களத்தில் விளையாடும்போது விராட் கோலி காட்டும் ஆக்ரோஷம் பிடித்திருந்தது. பிசிசிஐ அவருக்கு அநீதி இழைத்துள்ளது, வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், மரியாதை நிமித்தமாக அவரை தொடர அனுமதிக்க வேண்டும். விராட் கோலியிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவரது ஆக்ரோஷம், அவரது ஆர்வம், அவரது பேட்டிங் எல்லாமே பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான கேப்டன்” என்று தெரிவித்துள்ளார்.