
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார். மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. மேற்கொண்டு ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதில் கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.