
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றையும் ராகுல் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் காயம் காரணமாக களமிறங்காததை அடுத்து, கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடினார். இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி 40 முறை அரைசதம் கடந்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.