
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நள் பயிற்சி போட்டியிலும், ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையே மெக்காயில் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து ஆஸ்திரேலியா ஏ மாற்றும் இந்தியா ஏ அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது எதிர்வரும் நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.