-mdl.jpg)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்தே ரோஹித், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவர் மட்டும்தான் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.
ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார். ரோஹித் 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 70 ரன்களும், அக்ஸர் படேல் 84 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ரோஹித்தின் சதம் மற்றும் ஜடேஜா, அக்ஸர் படேலின் அரைசதங்களால் இந்திய அணி 400 ரன்களை குவித்தது. 223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் - கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ராகுல் ஃபார்மில் இல்லாமல் நீண்டகாலமாகவே சொதப்பிவரும் அதேவேளையில், ஷுப்மன் கில் அண்மைக்காலத்தில் டாப் ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார். ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை புறக்கணிக்கமுடியாத சூழல் இருந்தது. அவரைத்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.