
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதும், ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது.
மேலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் விராட் கோலி போன்ற முதன்மை அணியை தேர்வு செய்தது ஏன் என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
பார்படாஸ் நகரில் முதற்கட்ட பயிற்சிகளை முடித்துக் கொண்டு தற்போது அந்த மைதானத்திற்கு இந்திய அணியினர் சென்றுள்ளனர். அந்த மைதானத்தை பார்த்ததும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடைசியாக அங்கு விளையாடிய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த டாமினிக்கா மைதானத்தில் கடைசியாக இந்தியா கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 40, 112 ரன்களை எடுத்த உதவியுடன் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தோனி தலைமையிலான இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.