
இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தையும் வெற்றியுடன் தொடக்கியுள்ளது. குறிப்பாக ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 317 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தது.
இத்தனைக்கும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த திருவனந்தபுரம் பிட்ச்சில் டாஸ் வென்று பகல் நேரத்திலேயே எந்த இடத்திலும் சுணங்காமல் கடைசி வரை அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவரில் 390/5 ரன்கள் குவித்து அசத்தியது. ஆனால் அதே பிட்ச்சில் 100 ரன்களை கூட தாண்ட முடியாத அளவுக்கு இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு சுருண்ட இலங்கை பரிதாபமாக தோற்றது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தாலும் பேட்டிங்கில் 166* ரன்களை அதிரடியாக குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் அபார பினிஷிங் கொடுத்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல் 390 ரன்கள் குவிப்பதற்கு ஆரம்பத்திலேயே சதமடித்து 116 ரன்கள் குவித்த தொடக்க வீரர் சுப்மன் கில்லும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.