
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொட்ரானது நடைபெற்று வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள டெம்பா பவுமா மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.