
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (ஆகஸ்ட் 02) முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரானா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.