
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், உலகக்கோப்பையின் சிறந்த அணியையும் அந்த நான்கு அணிகளில் இருந்து மட்டுமே கும்ப்ளே மற்றும் ஹெய்டன் தேர்வு செய்தனர்.
தொடக்க வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தனர். டி காக் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 503 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 499 ரன்கள் குவித்த போதும் அவரை தேர்வு செய்யவில்லை.
அடுத்து பேட்டிங்கில் மூன்று மற்றும் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய விராட் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை தேர்வு செய்தனர். விராட் கோலி 594 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரச்சின் அதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரச்சின் தொடக்க வீரராக அல்லது மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தாலும் நான்காம் வரிசையிலும் களமிறக்கலாம் என கும்ப்ளே கூறினார்.