
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாகா இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் இன்று பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் மேத்யூ மோட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே இங்கிலாந்து அணி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஐயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரையும் வென்று அசத்தியது. ஆனாலும் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்து லீக் சுற்றுடனே வெளியேறியதும் கவனிக்கத்தக்கது.