
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் கோப்பையுடன் இந்திய அணி வீர்ரள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இதனையடுத்து இந்திய அணி வீரர்கல் டெல்லியில் இருந்து மும்பை செல்லவுள்ளனர். மும்பையில் மாலை 4 மணியளவில் திறந்த வெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கான பரிசுத்தொகையும் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எம்சிஏ தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. மேலும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால், அந்த வழியைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.