
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தாமஸ் ரோஜர்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சாம் ஹார்பரும் 23 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பியூ வெப்ஸ்டர் - கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பியூ வெப்ஸ்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 32 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார்.
இதற்கிடையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் வெப்ஸ்டர் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கார்ட்ரைட் 13 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களைக் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. ஹோபர்ட் தரப்பில் மார்கஸ் பீன், நாதன் எல்லிஸ், மிட்செல் ஓவன், நிகில் சௌத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.