
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இதன் காரணமாக பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணி 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்ற கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மற்றும் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இருவரும் வழக்கம் போல் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மைக்கேல் வாகன், இத்தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று கணித்திருந்தார்.
ஆனால் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்த பிறகு அவர் தனது கணிப்பை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்லும் என்று கூறியதுடன், இத்தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்றும் சூசகமாக கூறியுள்ளார். மேலும் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற உடனேயே, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பதிவில் "வாசிம் ஜாஃபர், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.. 1-0" என்று பதிவுசெய்திருந்தார்.