
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பலப்பரிட்சை நடத்தியது. டால்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அனிக்கு டெவால்ட் பிரீவிஸ் - ஷயாம் ஜஹாங்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரீவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷயாம் ஜஹாங்கீரும் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மொனாங்க் படேல் - ரஷித் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொனாங்க் படேல் 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரஷித் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்த நிலையில் ரஷித் கானும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆரோன் ஹார்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.