
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பைக்காக எல்லா அணிகளும் வேகமாகத் தயாராகி வருகின்றன. சில இடங்களுக்கு வீரர்களைக் கண்டறிவதும், சில வீரர்களின் காயங்கள் எப்படியானதாக இருக்கும்? என்று முடிவுக்காக காத்திருப்பதுமாக தயாரிப்புகள் செல்கின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த டி20 உலகக்கோப்பை முதலே வீரர்களின் காயம் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி வருகிறது.
கடந்த முறை இந்திய அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் இல்லாதது, அனுபவ இடதுகை ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாதது, முக்கியமான அரையிறுதியில் எதிரொலித்தது. இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, முன்பை விட மோசமாக வீரர்களின் காயங்கள் இந்திய அணி நிர்வாகத்தை கவலை அடைய வைத்திருக்கின்றன. ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷ்ப் பந்த், கேஎல் ராகுல், பிரஷித் கிருஷ்ணா என்று இந்த பட்டியல் நீள்கிறது.
மேலும் தற்பொழுது முகமது சிராஜ் காயத்தில் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது. இவர்கள் எல்லோருமே இந்திய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்கான திட்டத்தில் இருந்தவர்கள். ஒரு அணியின் தயாரிப்பு திட்டத்திலிருந்து ஐந்து, ஆறு வீரர்கள் வெளியேறினால், அந்த அணி உலகின் எவ்வளவு சிறந்த பெரிய அணியாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது.