
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸிலும் சேர்த்து 91 ரன்களையும், விராட் கோலி 6 இன்னிங்சில் 93 ரன்களையும் மட்டுமே எடுத்து சோபிக்க தவறியதன் காரணமாகவே இந்திய அணி இந்த படுதோல்வியை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும் என்ற சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமான தொடராகும்.