
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் இணைந்த ரிஷப் பந்த் - அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த் கொடுத்த அடுத்தடுத்த கேட்சுகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். இதன் காரணமாக இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 40 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 20 ரன்களில் அக்ஸர் படேல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை பரிசளித்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 42 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முகமது அமீரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.