
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து தாயகம் திரும்பியது. குறிப்பாக சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை பந்தாடி நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை முத்தமிட்டது.
முன்னதாக கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கையை தன்னுடைய மிரட்டலான பந்து வீச்சால் விட்ட முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாக முக்கிய பங்காற்றினார். அதிலும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அவர் சர்வதேச அரங்கில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் வரலாறு படைத்தார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிவேகமாக 5 விக்கெட்களை (16 பந்துகளில்) எடுத்த பந்துவீச்சாளர் என்ற உலக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக கிடைத்த ஆட்டநாயகன் விருதையும் மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசாக கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். இந்நிலையில் ஆசிய கோப்பை முடிந்த கையோடு ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.