
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த நேரத்தில் என் பார்வையில், நீங்கள் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காக அனுகுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். என்னை போறுத்தவரை இந்த பதவிக்கு தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பிராண்டன் மெக்கல்லம் சரியான தேர்வாக இருப்பார். ஏனெனில் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புவதால் சொல்கிறேன். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.