
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. நாளை மறுநாள் தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூலை இரண்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது.
2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த டெஸ்ட் தொடர இடம் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இது கருதப்படுகிறது . சமீப காலமாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதை நாம் காண முடிகிறது. 2014 ஆம் ஆண்டு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியா வலிமையான டெஸ்ட் அணியாக உருவானது.
அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இலங்கை வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றது . இந்திய அணி சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர் எம்எஸ்கே பிரசாத்.