
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இப்போட்டி 32 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் அபி ஐட்கென் ஒரு ரன்னிலும் பிப்பா ஸ்ப்ரூல் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் - சாரா பிரைஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் சரா பிரைஸ் 21 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஐல்சா லிஸ்டர் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேத்ரின் பிரைஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.