சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சாடிய முரளி விஜய்; இணையத்தில் பரபரப்பு!
தென்னிந்திய வீரர்களை சில முன்னாள் மும்பை வீரர்கள் பாராட்டுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 2-வது நாளன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இன்றைய தொலைக்காட்சி வர்ணனையில் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டுகளில் அரை சதத்தைச் சதமாக மாற்றுவது குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் முதல் இடத்தில் இருந்தார் முரளி விஜய். ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அவருக்குப் பின்னால் இருந்தார்கள். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்து வர்ணனையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சர்யமடைந்தார்.
Trending
இதையடுத்து முரளி விஜய் ட்விட்டரில் கூறியதாவது, “ஆச்சர்யமா உங்களுக்கு? மும்பையைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் ஒருபோதும் தென்னிந்திய வீரர்களைப் பாராட்டுவதில்லை” என்றார்.
ரோஹித் சர்மா இன்று சதமடித்த பிறகு, வர்ணனையில் முரளி விஜய்க்குப் பதில் அளிக்கும் விதமாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், “அரை சதத்தைச் சதமாக மாற்றுவதில் ரோஹித் சர்மா தற்போது 2ஆவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் முரளி விஜய் இருப்பது நல்ல விஷயம். அவரைப் போன்றவர்கள் செய்த பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம். 12 சதங்கள், அதில் 9 சதங்கள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை. அபாரமாக விளையாடி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்” என்றார்.
இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3,982 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2018இல் பெர்த் டெஸ்டில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020ஆம் ஆண்டிலும் விளையாடினார். அதன்பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் பங்கேற்கவில்லை. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now