
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மோசமானது என ஐசிசி ரெஃப்ரீ கிறிஸ் பிராடு அறிக்கை அளித்தார். மேலும் 3 டெஸ்ட் போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிவடைந்துள்ளதால் ஆடுகளம் தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறுகையில், “இந்த விவகாரத்துக்குள் நான் அதிகம் செல்லமாட்டேன். போட்டி ரெஃப்ரீக்கு அவருடைய கருத்தைகூற உரிமை உள்ளது. அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேனா? அல்லது இல்லையா? என்பது விஷயம் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதும் முக்கியம் இல்லை. சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் சிக்கலில் இருப்பதால், முடிவுகள் கிடைக்கும் ஆடுகளங்களில் விளையாட முனைப்பு காட்ட வேண்டியது உள்ளது.
நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது சில சவாலான ஆடுகளங்களில் விளையாடி உள்ளோம். 2022ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விளையாடினோம். அங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டனர். முடிவுகளை அடையக்கூடிய ஆடுகளங்களையே அனைவரும் உருவாக்க விரும்புகிறார்கள். அங்கு பந்துகள் மட்டையின் மேல் பகுதிக்கு கடந்து செல்லும் வகையில் ஆடுகளங்கள் தயார் செய்வார்கள். இது அவசியமானதும், விளையாட்டின் ஒரு பகுதியும் ஆகும்.