முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். அதன்படி இந்த முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மைக்கேல் லெவிட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓடவுட்டும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏங்கல்பிரெட் 8 ரன்களுக்கும், தேஜா நிடமானுரு 19 ரன்களுக்கும், லோகன் வான் பீக் 5 ரன்களிலும், ஆர்யன் தத் 2 ரன்களிலும், பால் வான் மீகெரன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் கிறிஸ்டோபர் சோல் மற்றும் கவின் மைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மைக்கேல் ஜோன்ஸ் ஒரு ரன்னிலும், ஒல்லி ஹாரிஸ் 4 ரன்களிலும், சார்லி டீர் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் - மேத்யூ கிராஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிச்சி பெர்ரிங்டன் 39 ரன்களிலும், மேத்யூஸ் கிராஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஸ்காட்லாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் விவியன் கிங்மா 4 விக்கெட்டுகளையும், லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now