
தற்போது உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் மற்றும் டி10 லீக் தொடர்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் இந்த லீப் போட்டிகளில் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு வருகின்றனர் . சமீபத்தில் கூட அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் கிரிக்கட் லீக் என்ற டி20 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியிலும் ஐபிஎல் அணியில் உரிமையாளர்கள் பல அணிகளை வாங்கி இருக்கின்றனர் .
இந்தப் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் இந்தியாவின் அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது . இவர்களில் அம்பத்தி ராயுடு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் தான் வாங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பிற நாடு கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொள்வதை தடுக்க பிசிசிஐ நிர்வாகம் கடுமையான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது . இது தொடர்பாக என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என பிசிசிஐ நிர்வாகக் குழு கடும் ஆலோசனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .