
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.