
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் வில் யங் 43 ரன்களையும், டம் லேதம் 63 ரன்களையும், கேன் வில்லியம்சன் 44 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கிரௌலி 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் 12 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட்டும் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்ன்ர் இணைந்த பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.