ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீது சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் விராட் கோலி இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேபோல் ரோஹித் சர்மாவும் சதமடித்தார். இந்நிலையில் இவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து இந்திய வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
Trending
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின் இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வாங்கவில்லை என்று ஊடகங்களால் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே தன்னுடைய ஆறாவது உலகக் கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களுக்கு அந்த நிலை தான் ஏற்பட்டது. உலகக்கோப்பைகளை தொடர்ந்து வெல்ல முடியாது. ஏதோ மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு வந்து உலக கோப்பையை உடனே வென்று தந்து விட்டார். இதனால் அனைவரும் அதே போல் செயல்பட வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியமாகும். விராட் கோலி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையும், 2013 சாம்பியன்ஸ் கோப்பையும் வென்றிருக்கிறார்.
ரோஹித் சர்மாவும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறார். எனவே இரண்டு வீரர்களுக்கும் கொஞ்சம் சுவாசிக்க இடம் கொடுங்கள். தொடர்ந்து இருதரப்பு கிரிக்கெட் போட்டி ஐபிஎல் போட்டி என பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். ஆனால் ஐசிசி தொடர்களில் நெருக்கடியான கட்டங்கள் உங்களுக்கு சாதகமாக சென்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். விராட் கோலி 3 ஆண்டுகளுக்கு மேல் சதம் விளாசவில்லை என்று அனைவரும் பேசினார்கள்.ஆனால் அதில் 8 மாதம் கரோனா காலமாக ஒரு போட்டி கூட நடைபெறவில்லை.
அதன் பிறகு நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டியில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்த சூழலில் யார் இப்படி கேள்வி கேட்கிறார்கள்? ஏன் இப்படி கேட்கிறார்கள்? இதை வைத்து அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. இந்திய அணியின் பலமே டாப் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் மூன்று வீரர்களும் அதிக ரன்கள் அடித்து விடுவார்கள். இதில் இந்த மூன்று வீரர்களும் எப்படியாவது சொதப்பினால் மட்டுமே இந்திய அணிக்கு கடந்த காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் நாம் ரோஹித் சர்மாவையும்,விராட் கோலி பற்றி தான் நிறைய பேசியிருக்கிறோம். தவானும் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய வேலையை அமைதியாக செய்திருக்கிறார். ஆனால் அவரை யாரும் கொண்டாடுவதில்லை. தவானின் இடத்தை யார் தான் நிரப்புவார்கள். தவானுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டுமா இல்லை இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை பட்டை தீட்ட வேண்டுமா ?ஒரு பெரிய ஸ்கோர் அடித்ததால் இஷான் கிஷன் தேர்வு செய்வதை விட அணிக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன்.
இவ்விரண்டு வீரர்களிலும் யார் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்? யார் இந்திய அணிக்கு அதிக காலம் விளையாட கூடியவர்கள் என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஷுப்மன் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங்கில் அனைத்து ஷார்ட்களையும் ஆட கூடியவராக இருக்கிறார். ஹைதராபாத்தில் அவர் அடித்த இரட்டை சதம் அதற்கு நல்ல உதாரணம். இசான் கிஷன் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பாகவே ஷுப்மன் கில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now