
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டான நிலையில் இந்திய வீரர்கள் கடும் சவால் கொடுத்து வருகின்றனர். இந்திய அணியின் ஓப்பனிங் வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா அட்டகாசமான அரைசதத்தால் அணியை தூக்கி நிறுத்தினார். லோயர் ஆர்டரில் ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடித்தது உதவியாக இருந்தது.
லோயர் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் கூட அரைசதம் அடித்த சூழலில் நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய விராட் கோலி 26 பந்துகளில் வெறும் 12 ரன்களை மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதுவும் அறிமுக வீரர் மர்ஃபி விரித்த வலையில் மிகவும் மோசமான முறையில் கோலி ஏமாந்தது தான் தற்போது பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
லெக் சைடில் மர்ஃபி வீசிய ஷார்ட் பந்தை சுலபமாக பின் திசையில் அடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கோலி பேட்டை நகர்த்தினார். ஆனால் பந்து பவுன்ஸாகாமல் நினைத்ததை விட மிகவும் கீழாக வந்துவிட்டது. இதனால் துரதிஷ்டவசமாக விராட் கோலி அவுட்டானார். இந்த போட்டியில் மெர்ஃபி இதுவரை வீசியதிலேயே மோசமான பந்து என்றால் இதை கூறலாம். ஆனால் இதில் தான் கோலி சரிந்தார்.