
நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்சமயத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறினார். அந்த சமயத்தில் மற்றொரு வீரர் ரோஹித் சர்மாவும் மிடில் ஆர்டரில் மட்டுமே வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்டு வந்தார்.
அப்போது அவர்களின் திறமையை கவனித்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறக்கி விட்டார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இந்த ஜோடி அபாரமாக செயல்பட்டு 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உதவியது. குறிப்பாக ஷிக்கர் தவான் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியாவின் வெற்றி பங்காற்றினார்.
அப்போதிலிருந்து 2019 உலகக் கோப்பை வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடியாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். மேலும் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5,148) பார்ட்னர்ஷிப் அமைத்த 2ஆவது இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள்.