ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது இது மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் - ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது . இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தார். வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது.
Trending
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ரஷித் கான், “ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும். சமீபத்தில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்தனர். இந்த வெற்றி அவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை தரும். இந்த வெற்றி அவர்களுக்கானது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now