
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20 தொடரை கைப்பற்றியது.
கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தப் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வழங்கினர். அந்த அணியின் இளம் துவக்க வீரர் சைம் அயூப் மிகச் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இஃதிகார் அஹமத் 25 பந்துகளில் 31 ரன்களையும் அப்துல்லா ஷஃபீக் 13 பந்துகளில் 23 ரன்களையும் கேப்டன் சதாப் கான் 17 பந்துகளில் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 28 ரன்களை சேர்த்தார்.