
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 29 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பென் டக்கெட் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஒல்லி போப் 3 ரன்களுக்கும், ஜோ ரூட் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு பென் டக்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஹாரி புரூக்கும் 5 ரன்களில் நடையைக் கட்டினார்.