
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 71 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லேதம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். மேலும் இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் சர்வதேச சதமாகவும் இது அமைந்தது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டிலும் முதல் சதத்தைப் பதிவுசெய்த வீரர் எனும் பெருமையையும் டெவான் கான்வே பெற்றிருந்தார்.
அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 122 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறிவினர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாம் பிளெண்டல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் பிளெண்டல் அரைசதம் கடக்க, இஷ் சோதி 11 ரன்களோடு வெளியேறினார்.