
BAN vs PAK, 1st T20: பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை 110 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
அதேசமயம் மறுபக்கம் சைம் அயுப் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 3 ரன்களுக்கும், கேப்டன் சல்மான் அலி ஆகா 3 ரன்னிலும், ஹசன் நவாஸ் ரன்கள் ஏதுமின்றியும், முகமது நவாஸ் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமற்றமாளித்தனர். அதன்பின் இப்போட்டியில் அரைசத அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமானும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 44 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குஷ்தில் ஷா மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.