
பாகிஸ்தான் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் தற்போது வரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டுலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது அறிவித்துள்ளது.