
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உச்சகட்ட ஃபார்மில் மிரட்டி வந்தது.
ஆனால் அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு அடக்கிய ஆஸ்திரேலியா 240 ரன்களுக்கு சுருட்டி கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
முன்னதாக ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றதாலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியதாலும் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்ற அவர் பரம எதிரி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்தித்து 2 – 2 (5) என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க உதவினார்.