
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடரானது இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கொண்டு இதில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் எட்டு வாரங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அதன்படி, அஷஸ் தொடர், ஒருநாள் உலகக்கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி இரு தரப்பு தொடர்களில் விளையாடியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடர், சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் டி20 தொடர் உள்பட பிரான்சைஸ் தொடர்களிலும் விளையாடி வருகிறார். இதனால் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் பங்கேற்றுவருதன் காரணமாக அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு எதிர்வரும் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்தும் பாட் கம்மின்ஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.