ஒரு அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல - கபில் தேவ்!
அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு துறையும் பலவீனமாக உள்ளதுடன், அணியின் வெற்றி வாய்ப்பையும் அது பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான காயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது. ஆனால் பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும், நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
அதனால் வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அவருக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் இடம்பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரிஸர்வ் வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே
Win Big, Make Your Cricket Tales Now