
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட் தனது குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலிருந்து விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கான மாற்று வீரராக ஜேமி ஸ்மித் இங்கிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.