
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் விளாசி அசத்தினார். விராட் கோலியின் இமாலய இன்னிங்ஸ் மூலம் தற்போது ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கொஞ்சம் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணியை 150 ரன்களில் இந்தியா சுருட்டி விட்டால், எஞ்சியிருக்கும் 60 ரன்களை இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் எட்டி விடலாம். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் போது கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார். 59 ரன்கள் உடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி ஒரு முறை கூட பவுண்டரி அடிக்காமல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஓடியே சதத்தை எட்டினார்.
அதன் பிறகு கூட விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் பொறுப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினார். ஒரு முனையில் விராட் கோலி நங்கூரம் போல் நின்று ரன்கள் சேர்க்க மறுமுனையில் அக்சர்பட்டேல் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.ஒரு கட்டத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் சத்து குறைந்து விராட் கோலிக்கு காலில் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அணி மருத்துவர்கள் விராட் கோலிக்கு சிகிச்சை அளித்தார்கள்.