
இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்வி ஷா ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு மும்பையிலுள்ள சாண்டகிரூஸ் ஹோட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார். அப்போது, நடிகை ஸ்வப்னா கில், பிரித்வி ஷா உடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷாவின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் பிரித்வி ஷாவும் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்வி ஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஸ்வப்னா கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியில் வந்த ஸ்வப்னா கில், பிரித்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார்.
பிரித்வி ஷா மது போதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்வப்னா கில் அந்தேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்வப்னா புகார் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.