
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக முடியவில்லை. இரு அணிகளும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் இந்திய அணி 2-1 என பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. 4ஆவது டெஸ்ட் போட்டியில் மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்த ஒரே விஷயம், கிட்டத்தட்ட 1200 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார்.
கடைசியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சதம் அடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கொடுத்தது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர், 2019ஆம் ஆண்டு டெஸ்டில் சதம் அடித்தார். முன்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். தற்போது டெஸ்டிலும் பார்மிற்கு வந்திருப்பது அணிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கிறது.
போட்டி முடிந்த பிறகு இந்த சதத்தை பற்றி பேசிய விராட் கோலி, பேட்டிங்கில் நல்ல நிலையில் தான் இருந்தேன். சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் உணரவில்லை. கடந்த காலங்களில் நான் செய்ததற்கு இணையாக செய்யவில்லை என்று மட்டுமே தெரிந்தது. மேலும், நான் அடிக்கும் 40-50 ரன்கள் ஏன் 150 ரன்களாக மாறவில்லை என்ற எண்ணம் நீண்ட காலமாக உறுத்திக்கொண்டே இருந்தது. நான் 40-50 ரன்கள் அடிக்கும் ஆள் நான் இல்லை.” என ராகுல் டிராவிட் உடன் நடந்த உரையாடலில் விராட் கோலி பேசினார்.