
இந்தியா - நியூசிலாந்து, வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்கு தள்ளி காகிசோ ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
அதேசமயம் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிய ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இடங்கள் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு இடங்கள் பின் தங்கி 4ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.