
ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தியது.
இது ஒருபுறம் இருக்கம், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ளது 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து தொடரில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் 7 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.